இது ஒருபக்கம் இருக்க, பொது மக்களும் மதுவை நவீன வாழ்க்கை முறை மாற்றத்தின் அங்கமாகப் பார்க்காமல் அது ஒரு தீங்கு என்ற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த காலத்தைப் போல குடியை நாம் ஒழுக்கக் கேடாக அணுக வேண்டியதில்லை. மாறாக அது கடுமையான உடல்நலக் கேடுகளை உண்டாக்குகிறது என்ற புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். எப்போதாவது களிப்புற்றிருக்க மது அருந்துதல் என்ற பண்பாடே இங்கு இல்லை. எதற்கெடுத்தாலும் குடி, அளவில்லாமல் குடி என்ற இரண்டு நிலைகளிலேயே இங்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இதுதான் ஆபத்து. குடிக்கத் தெரியாதவர்கள் நிறைந்த சமூகத்தில் அல்லது குடியை ஆண்மையின் அடையாளமாக கருதுவோர் நிறைந்திருக்கும் சமூகத்தில் குடியால் உண்டாகும் உடல் மன மற்றும் சமூகத் தீமைகள் குறித்தும் பெருகும் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு உடனே தொடங்கியாக வேண்டும். மதுவிலக்கு எனும் இலக்கை எட்டும் முன் இத்தனை முன்னேற்பாடுகளை அரசு செய்தாக வேண்டும்.